Thursday, October 7, 2010

படுக்கைஅறை

நீல வெளிச்சத்தில்
விலக்கப்பட்ட முள்தேடி
ஓயாமல் சுழல்கிறது
இசைத்தட்டு

திராட்சை பறிக்கும் பெண்ணின்
ஓவியத்திற்குக் கீழே
வெறுமையாக உள்ளது
பழக்கூடை

பூனைகளுக்குக்
குழந்தைகளின் குரலைக் கொடுத்து
எதையெதையோ கேட்க வைக்கிறது
இந்த இரவு

கவிஞர் - பழநிபாரதி

Tuesday, March 16, 2010

பிடித்த உண்மை


அன்று அலுவலகம் முடிந்து மாநகர பேருந்தில் வீடு சென்று கொண்டிருந்தேன். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. என் அலுவலகம் நந்தனத்தில் உள்ளது. வீடு வேளச்சேரியில் உள்ளது. நந்தனத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து சைதாபேட்டை பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. நான் படிக்கட்டில் இருந்து இறங்கிக் கொண்டேன். ஏற வேண்டிய ஏறிக் கொண்டார்கள். இறங்க வேண்டிய பயணிகள் இறங்கிக் கொண்டார்கள். நான் மறுபடியும் படிக்கட்டில் ஏறி பக்கத்தில் உள்ள கம்பியைப் பிடித்துக் கொணடேன். நான் கம்பியில் கையை வைக்கும்போது தெரியாமல் வேறொரு கையின் மீது பட்டுவிட்டது. சட்டென்று கையை விலக்கிக் கொண்டேன். பிறகு அந்த கை யாருடையது என்று திரும்பிப் பார்த்தேன். அது ஒரு அழகிய இளம்பெண்ணின் கை. அவளுக்கு ஒரு பதினெட்டு வயது இருக்க வேண்டும். சுடிதார் அணிந்திருந்தாள். சட்டென்று திரும்பிக் கொண்டேன். அவளுடைய முகத்தை ஒழுங்காகக் கூட பார்க்கவில்லை. ஆனால் அவள் அழகாக இருந்தாள். அது மட்டும் தெரியும்.

பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த அழகிய இளம்பெண்ணின் கையும் எனது கையும் பக்கத்தில் பக்கத்தில்தான் இருந்தன. சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளின் சுண்டுவிரல் மீது எனது கையை வைத்தேன். அவள் ஒன்றும் செய்யவில்லை. பிறகு மெல்ல எனது அனைத்து விரல்களையும் அவளின் விரல்களின் மேல் படர்வது போல் வைத்துக் கொண்டேன். ஆனாலும் அவள் ஒன்றும் செய்யவில்லை. அவளது கையை மிருதுவாக தடவிக் கொண்டே வந்தேன். அப்படி செய்ய எனக்கு எப்படி தைரியம் வந்தது என்று தெரியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. சட்டென்று கையை விலக்கிக் கொண்டேன். ஆனால் சற்று நேரத்தில் அவள் தன் மிருதுவான விரல்களை என் விரல்களின் மேல் வைத்தாள். என் மனதிற்குள் ஏதோ பட்டாம்பூச்சி பறப்பது போல் இருந்தது. ஏதோ ஒருவித இனம்புரியாத சந்தோசம். அதை வார்த்தைகளில் வர்ணிப்பது கடினம். அவளுடைய முகத்தைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. ஆனால் கடைசிவரை பார்க்கவில்லை. கூச்சமா; பயமா; அல்லது பயம் கலந்த கூச்சமா என்று தெரியவில்லை. எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும். கண்டிப்பாக பார்த்திருப்பாள். பேருந்து வேளச்சேரி பேருந்து நிலையத்தில் வந்து நின்றது. நான் இறங்கிக் கொண்டேன்.

சற்று தூரம் நடந்தபின் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னைப் பார்ப்பது தெரிந்தது. ஆனால் அவள் முகத்தை என்னால் ஒழுங்காய் பார்க்க முடியவில்லை. பேருந்தின் பின்புற கண்ணாடி அவளின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு கல்லை எடுத்து கண்ணாடியை உடைக்கலாம் போலிருந்தது. என்னை நானே நொந்து கொண்டேன். சிறிது நேரத்தில் பேருந்து நகர்ந்து சென்றுவிட்டது. நானும் வீடு போய் சேர்ந்தேன். அன்று முழுவதும் அவள் நினைவாகவே இருந்தது.

மறுநாள் அலுவலகத்தில் வேலை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு அழகிய இளம்பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள். என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவளைப் பார்த்தேன். சட்டென்று எனக்குள் நானே நினைத்துக் கொண்டேன். ஒருவேளை நாம் நேற்று பேருந்தில் பார்த்த பெண்ணாக இருக்குமோ?. அவளிடம் சென்று பேசலாமா?....இல்லை வேண்டாமா?....என்று நினைத்துக் கொண்டிருக்கையில்...அப்போது வந்த ஒரு பேருந்தில் ஏறி சென்றுவிட்டாள். அடுத்து வந்த பேருந்தில் ஏறி நான் வீடு திரும்பினேன். அன்று முழுவதும் மனம் ஏதோ பாரமாய் இருப்பதைப் போல உணர்ந்தேன். சரியாக தூங்க முடியவில்லை. அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு நாள் செல்ல செல்ல அவளின் ஞாபகங்கள் என்னுள் இருந்து மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தது. ஆனால் முழுவதுமாய் இல்லை. இன்றுவரை....

தொடர் நிலா வண்டி


புகைவண்டி கடப்பதற்காக
நிலவு நிற்குமா – நிற்கின்றாய்!!!
நானும் நிற்கின்றேன்
வெட்கம் சூழ்ந்த உன் முகத்தை கண்டுகொண்டு!!!
கடந்து சென்ற புகைவண்டி நிச்சயம் சொல்லி இருக்க வேண்டும்
'பாவம் அவனை ஒரு முறை பார்த்து விடு என்று!!! '
திரும்பினாய்
" என்ன வேண்டும்!!!" என்றாய் எதுவும் அறியாதவள் போல்
"உன் காதல்!!" என்றேன் ....
மறுகணம் மேகம் மறைத்த நிலவை போல்
ஜன கூட்டத்தினுள் பறந்து மறைகிறாய்!!!
" மெதுவாகவே எடுத்து வா
உன் காதலை,
காத்திருப்பேன்
என் வாழ்க்கையோடு!!!

காதல் கதை


"இந்நேரம் மொட்டைமாடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?" என்றேன்.
"ஹேய் நான் எங்க வீட்டு மொட்டை மாடில இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்?" ஆச்சரியத்தோடு ஒலித்தது அவள் குரல்.

"உன் ஒளியால் நிலா சற்று பிரகாசம் கூடுதலாக தெரிந்தது. அதை வைத்து தான் " என்றேன்.
"போடா.... உனக்கு இதே வேலையா போச்சி" என்றாள் வெட்கப்பட்டுகொண்டே.
"வெட்கப்படுகின்றாயா!!! ஆச்சரியமாக இருக்கின்றதே"
"வெட்கமா???நானா???.... யார் சொன்னா!!! எனக்கு வெட்கப்படுவது பிடிக்காது தெரியுமா" என்றாள் போலி திமிருடன்.
செல்லப்பொய்கள் சொல்வது பெண்களுக்கு பிடிக்கும்...ஆண்களுக்கோ கதை சொல்வது...
பொய் சொல்லிவிட்டாள்... இப்பொழுது கதையின் முறை... ஆரம்பித்தேன்
"அப்பாடி!!! உலகம் பிழைத்தது" என்றேன்.
"என்ன?நான் வெட்கப்படுவதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன தொடர்பு?..." என்றாள் ஆச்சரியத்தோடு.
"சொல்கிறேன்... இரவு வெகு நேரம் வெட்ட வெளியில் நிற்காதே என்று உன் வீட்டில் சொல்லி இருக்கிறார்கள் தானே" கதையைத் தொடர்ந்தேன்.
"ஆம்... அதற்கு என்ன"
"அது ஏன் தெரியுமா?"
"குழந்தைக்கு கூட தெரியும். இரவு வெகு நேரம் வெளியில் நின்றால் பனி பிடிக்கும்" என்றாள்.
"தவறு. பனி பிடித்து கொண்டு போய் விடும்" என்றேன்.
"பிடித்து கொண்டு போய் விடுமா? என்ன சொல்ற" என்றாள்
"உனக்கு கதையே தெரியாதா?... அந்த காலத்தில் பனித்தேவன் மிகவும் மோசமானவனாய் இருந்தானாம். இரவில் வெளியில் அலையும் அழகான பெண்களை தனக்கு சேவை செய்ய பிடித்து கொண்டு போய் விடுவானாம். அதனால் அந்த காலத்தில் பெண்களை இரவு நேரத்தில் வெளியில் உலாவ விட மாட்டார்கள்"
"ஆனால் இப்பொழுது உலாவ விடுகிறார்கள் அல்லவா!!! அந்த பனித்தேவன் இப்பொழுது சேவைக்கு ஆள் தேடுவது இல்லையா?" என்றாள்.
"இல்லை! அவன் மாறி விட்டான்" என்றேன்.
"ஓ!!! திருந்தி விட்டானா!!!" என்றாள்.
"இல்லை. காதலித்து விட்டான். அவனையும் தன் அறிவால் ஒரு மங்கை பித்து பிடிக்க வைத்து விட்டாள்." என்றேன்.
"காதலா?..."என்றாள்.
"ஆம். அந்த பெண்ணையே மணமுடித்து அவளுடன் வட துருவத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். அவள் இறக்கும் வரை. அன்று முதல் அவன் அவள் நினைவாகவே வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையே ஓய்வின்றி அலைந்து கொண்டு இருக்கின்றான்!!!" என்றேன்.
"சரி! அதற்கும் உலகம் அழிவதற்கும் என்ன சம்பந்தம்" என்றாள்.
"தன் காதலியை மறக்க நினைத்து அலையும் அவன் உன் வெட்கத்தை கண்டால் நிச்சயம் அவள் எண்ணம் வந்து உருகி விடுவான். அவன் இல்லை என்றால் துருவங்கள் இரண்டும் அழிந்து விடும். அப்புறம் உலகம் அழிய தானே செய்யும்" என்றேன்
"உனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி எல்லாம் கதை கிடைக்குதோ???" என்றாள்.
புன்னகைத்தேன்.
"என்ன பதிலை காணோம்" என்றாள்.
நான் கதை சொல்லவில்லை, உன் வெட்கம் என்னிடம் சொல்வதை நான் உன்னிடம் சொல்கிறேன் என்று சொல்ல துடித்த உதடுகள் ஏனோ "ஒன்றுமில்லை!!!" என்று சொல்லி அடங்கின.
"சரி!!! எனக்கு தூக்கம் வருகிறது. நீயும் போய் நிம்மதியாக தூங்கு. குட் நைட்" என்று சொல்லி அவளது கைப்பேசியை அணைத்தாள்.
விடிந்திருந்தது.!!!
முற்றும்

Saturday, February 28, 2009

பிறந்த நாள் பரிசு


என்னவளுக்கு பிறந்த நாள் என்ன பரிசு கொடுக்கலாம்? பூச்செண்டு! - இல்லை அவளிடம் அது இருக்கிறது இனிப்பு! - இல்லை அதுவும் அவளிடம் இருக்கிறது முத்தம்! - கொடுக்கலாம் அவள் சம்மதிப்பாளா?